36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் சோகம்.. 20 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

Oct 21, 2024 - 17:19
Oct 21, 2024 - 17:25
 0
36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் சோகம்.. 20 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை
இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசித்துள்ளது

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டாம் லாதம் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நாளில் ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

இதனால், இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. ரிஷப் பண்ட் எடுத்த 20 ரன்களே அதிகப்பட்சமாக அமைந்தது. கோலி, கே.எல்.ராகுல், சர்ஃப்ராஸ் கான், ஜடேஜா, அஸ்வின் ஆகிய 5 பேர் டக்-அவுட் ஆகினர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரார்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில், மோசமான பல சாதனைகளை படைத்தது.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, தரமான ஆட்டத்தால் 402 ரன்களை குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா, 157 பந்துகளில் [13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 134 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய டெவன் கான்வே 105 பந்துகளில் [11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 91 ரன்களும், டிம் சௌதி 73 பந்துகளில் [5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 65 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி முதல் இன்னிங்ஸை போலல்லாமல், நிதானமாக ஆடியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்களிலும், ரோஹித் சர்மா 52 ரன்களிலும் வெளியேறினர். இதன் பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சர்ஃப்ராஸ் கான் இணை சரியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியது.

பின்னர், விராட் கோலி 70 ரன்களிலும் வெளியேறினார். இருவரும் இணைந்து 136 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடியாகவே ஆடினார். இதற்கிடையில் சர்ஃப்ராஸ் கான் 110 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பண்ட் 55 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். பின்னர் சரியாக 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சர்ஃப்ராஸ் கான் வெளியேறினார். இருவரும் இணைந்து 177 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 99 ரன்களில் வில்லியம் ஓ ரார்க் பந்தில் போல்டானார். அப்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழப்புக்கு 433 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்து வந்த வீரர்கள் கே.எல்.ராகுல் (12), ரவீந்திர ஜடேஜா (5), அஸ்வின் (15) என அடுத்தடுத்து வெளியேறியதால் 462 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர், 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி களமிறங்கியது. 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக 4ஆவது நாள் ஆட்டம் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று, 5ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கி நியூசிலாந்து அணி, 27.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டாம் லாதம் டக்-அவுட் ஆனாலும், வில் யங் (48 ரன்கள்) மற்றும் ரச்சின் ரவீந்திரா (39 ரன்கள்) அவர்களின் நிதான ஆட்டத்தால் அந்த அணி அசத்தல் வெற்றிபெற்றது.

இதன் மூலம் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசித்துள்ளது. இதுவரை நியூசிலாந்து 3 முறை மட்டுமே இந்திய மண்ணில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1969ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டிலும், 1988ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே, இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்றிற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. முன்னதாக, 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருந்தது.

கடைசி 24 ஆண்டுகளில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 100க்கு மேற்பட்ட ரன்களை சேசிங் செய்து, எந்த அணியும் வெற்றி அடைந்ததில்லை. கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணி 2000ஆம் ஆண்டு, 164 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றது. இதற்கிடையேயான ஆண்டுகளில், 32 போட்டிகளில் விளையாடி 23 போட்டிகளில் இந்தியா மற்ற அணிகளை தோல்வியடையச் செய்துள்ளது. 9 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 4.83 ரன்ரேட்டில் வாரி வழங்கி இருந்தனர். இதற்கு முன்னதாக, இந்த ஆண்டில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 4.53 ரன்ரேட்டில் பந்துவீசி இருந்தனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2005ஆம் ஆண்டிற்கு பிறகு [பாகிஸ்தான் அணிக்கு எதிராக], டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. அதன் பிறகு நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, 3 போட்டிகளில் டிரா செய்துள்ளது. இதற்கு முன்னதாக, இதே மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையிலும், 3ஆவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 05ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow