ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா பும்ரா..? வெளியான முக்கிய அறிவிப்பு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகளுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டி மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மொத்தம் 8 அணிகள் மோதும் இந்த தொடரில் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். முக்கிய பந்து வீச்சாளரான பும்ரா தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் பெயர் இடம் பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முக்கிய பந்து வீச்சாளரான பும்ரா காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பும்ராவுக்கு பதில் இளம் வீரர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐசிசியிடம் பிசிசிஐ கொடுத்த இறுதி பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியின்போது கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
What's Your Reaction?






