இலவசம் கொடுத்தால்தான் முன்னேற்றம் இருக்கும்... எந்த மொழியையும் எதிர்க்காதீர்கள்.. வெங்கையா நாயுடுவின் அட்வைஸ்!
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதே போல மற்ற மொழியையும் கற்றுகொள்ளுங்கள் என முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கான புதிய விடுதி கட்டிடம் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு ஆகியவைகள் திறப்பு விழா மற்றும் 40 மாணிக்க ஆண்டு தொடக்க விழாவும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இருவரும் கட்டடங்களை தொடங்கி வைத்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ,முன்னாள் துணை வேந்தர்கள் பேராசிரியர்கள் பதிவாளர்க்ள் உள்ளிட்ட பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உதவிய அணைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்புரை ஆற்றினார். அதில், “உலக நாடுகளுக்கே இந்தியா கல்வியில் முன் உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறது. பல நாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயின்று செல்கின்றனர். மற்ற விஷயங்களில் இலவசங்கள் வழங்குவதை விட, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்றையும் இலவசமாக நாம் வழங்கினால் இத்துறைகள் முன்னேற்றமடையும். அதன் மூலம் நமது நாடும் முன்னேற்றமடையும். தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் செல்போன் மற்றும் தொலைக்காட்சிகளில் மாணவர்கள் மூழ்கிவிடுகின்றனர்.
அவ்வாறில்லாமல் அவர்கள் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். விளையாட்டிலும் மாணவர்கள் கவணத்தை செலுத்தி உடல் வலிமை, மன வலிமையை பெற வேண்டும். நம் நாடு இந்தியா இளைஞர்களைதான் நம்பியுள்ளது. நீங்கள் உங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எல்லா மொழியையும் கற்றுகொள்ளுங்கள். எந்த மொழியையும் எதிர்க்காதீர்கள். அது உங்களது வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்ததில் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஒரு காலத்தில் தொழில் நுட்பங்களை வெளிநாடுகளிடமிருந்து பெற்றோம். ஆனால் இன்று தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளைப் போல சிறப்பாக வளர்ந்துள்ளோம். இது கல்வியால் வந்த முன்னேற்றம்! இளைஞர்கள் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு இளைஞர்கள் முக்கியவத்தும் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?