Fastag New Rules 2024 : வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு.. பாஸ்டேக்கில் இன்று முதல் புதிய நடைமுறை அமல்.. முழு விவரம்!
Fastag New Rules 2024 : 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்த பாஸ்டேக்கில் வாகனங்களின் பதிவு எண், சேஸ் நம்பர், செல்போன் எண்களை கட்டாயம் இணைக்க வேண்டும். வாகனங்களின் முகப்புகளை பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கண்டிப்பாக ஒட்டியிருக்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.
Fastag New Rules 2024 : இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் மூலம் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வாகனங்கள் அதிகரித்ததால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதனை தவிர்க்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் மின்னணு கட்டண வசூல் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் (FASTag) முறையில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களின் முகப்பு கண்ணாடிகளில் பாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அதன்மூலம் அந்தந்த வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலித்துக் கொள்ளப்படும். இந்நிலையில், தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் (NPCI) பாஸ்டேக்கில் இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. NPCIயின் புதிய விதிகளின்படி, 5 ஆண்டுகள் பழமையான பாஸ்டேக்குகள் மாற்றப்பட வேண்டும்.
3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்த பாஸ்டேக்கில் வாகனங்களின் பதிவு எண், சேஸ் நம்பர், செல்போன் எண்களை கட்டாயம் இணைக்க வேண்டும். வாகனங்களின் முகப்புகளை பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கண்டிப்பாக ஒட்டியிருக்க வேண்டும். புதிய வாகன உரிமையாளர்கள் தங்கள் பதிவு எண்ணை வாங்கிய 90 நாட்களுக்குள் அப்டேட் செய்ய வேண்டும்.
இதேபோல் KYC விவரங்களை புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். KYC பதிவு செய்யாதவர்களுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகும் மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யாத பாஸ்டேக்குகள் செயலிழக்கம் செய்யப்படும். கணினி முறையில் எளிதாக பாஸ்டேக்குகளை அடையாள கொள்ளும் வகையிலும், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது.
பாஸ்டேக்குகளில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறை வாகன ஓட்டிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே 2019ம் ஆண்டு சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் விதிமுறை கொண்டு வரப்பட்டபோது, பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கொண்டு வரப்பட்டதால் வாகனங்கள் வரிசையில் காத்திருக்காமல் சுங்கச்சாவடியை எளிதாக கடந்து செல்கின்றன என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் கள நிலவரம் வேறு மாதிரி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது. ஆகையால் பாஸ்டேக் நடைமுறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே வேளையில் இந்தியாவில் சுங்கச்சாவடி என்பதே தேவை இல்லை. அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வன்னெடும் என்று ஒரு சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?