Samsung Protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... கொடுங்கோன்மை தான் திராவிட மாடலா..? சீமான் கேள்வி!

உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 9, 2024 - 16:42
Oct 9, 2024 - 16:48
 0
Samsung Protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... கொடுங்கோன்மை தான் திராவிட மாடலா..? சீமான் கேள்வி!
சாம்சங் தொழிலாளர் கைது - சீமான் கேள்வி

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, தமிழ்நாடு அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அமைச்சர்கள் சண்முகம், டி.ஆர்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சாலை நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 
  
இதனையடுத்து தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக சாம்சங் நிர்வாகத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை வீடு வீடாக சென்று போலீஸார் கைது செய்தனர். உரிமைக்காக போராடிய தொழிலாளர்களை போலீஸார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச் சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடும் திமுக அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா? எனவும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் சீமான். 

சமத்துவம், சம உரிமை, சமூகநீதி ஆகியவற்றின் காவலர்கள் தாங்கள்தான் என தற்பெருமை பேசும் திமுக ஆட்சியாளர்கள், உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் ‘சாம்சங்’ தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, ‘சாம்சங்’ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow