மகளிர் மேம்பாட்டுக்கு தனித்துறை.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை..!
தமிழகத்தில் சமூக நலத்துறையிலிந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென (Women Empowerment) தனி துறையை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பெண் மருத்துவர், அக்கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக புகார் கொடுத்ததால், பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் தன்னையும், தன்னுடன் பணிபுரிபவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
Read More: சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நீதிபதி, அதை நடைமுறைபடுத்துவது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்திரசேகர், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான, சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகளின் கீழ், உள்புகார் குழு அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் அரசு பணியாளர் விதிகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றங்களுக்கு ஆளாகும் பணியாளர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா *போஷ் சட்டத்தின் அடிப்படையில் காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி பாலியல் புகார்களின் மீது சிறப்பு கவனத்துடன் நடவடிக்கை எடுத்து வருவகிறது என குறிப்பிட்டார்.
Read More: பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு
மேலும், பெண்கள் பணி புரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இதுவரை 36000 உள்புகார்கள் குழு ( INTERNAL COMPLAINTS COMMITTEE) அமைக்கப்பட்டுள்ளதாகவும், 746 உள்புகார்கள் குழு விவரங்கள் இதற்கெனெ உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் படிப்படியாக முழுமையாக அனைத்து குழுக்களின் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும் என்று பட்டியலிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மஞ்சுளா, அரசுத்துறைகளில் பணியமர்வு, பதவியுயர்வு, ஊதிய உயர்வு வழங்கும் போதும், தேர்வு போட்டிகள் நடத்தும் போதும், பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்குவதையும்., அடிப்படைப் பணி முதல் உயர்நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பெண்மையை வெறுக்கும் போக்கினை மாற்றும் பொருட்டு பாலியல் உணர்த்திறன் ( Gender sensitisation ) அளித்தும், அரசு பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு ஓட்டுநர் உரிமம், பதிவு திருமணம், கடைகள், கம்பெனிகள், பள்ளி, மருத்துவமனை மற்றும் பிற நிறுவனங்கள் நிறுவுவதற்கும் பாலியல் உணர்திறன் தகுதிச் சான்றிதழ்களை கட்டாயப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மேலும், சமூக நலத்துறையிலிந்து பிரித்து பெண்கள் மேம்பாட்டுத்துறைகென ( Women Empowerment) தனி துறையை ஏன் தமிழக அரசு உருவாக்கக்கூடாது என கேள்வியையும் எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா, இவை அனைத்தும் அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் என்றும் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த சாத்திய கூறுகளையெல்லாம் ஆராய்ந்து தான் அரசு முடிவு செய்ய முடியும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை பாதுகாத்து, அச்சமின்றி தற்சார்புடன் வாழ பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு செயலர்களிடம் கலந்து பேசி அவற்றை செய்லபடுத்த மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா நீதிமன்றத்திற்கு உறுதுணையாக இருக்க கேட்டுக்கொண்டு வழக்கை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
What's Your Reaction?






