சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா
சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

2025 சாம்பியன் டிராபி தொடர் நேற்று முன்தினம் (மார்ச் 9) முடிவடைந்தது. இந்த தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபியை மீண்டும் இந்திய அணி வென்றுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற நிலையில், இந்த ஆண்டு மற்றொரு ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். பரபரப்பான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் துபாயில் இருந்து தாயகம் திருப்பினார்கள். சென்னை விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் வருண் சக்கரவர்த்தியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட நிலையில் போலீசார் அவரை கண்காணிப்பு அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின்னர் அவரது கார் விமான நிலையம் வந்தடைந்ததும் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர். காரில் புறப்பட்டு சென்ற வருண் சக்கரவர்த்தி "சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக" தெரிவித்தார்.
முன்னதாக மும்பை விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரோகித் சர்மா ஓய்வு
சாம்பியன் டிராபி தொடர் முடிந்ததும் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எதிர்காலத்தில் என் ஓய்வு குறித்து எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன்.
தற்போது வரை எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை, நடப்பது அப்படியே தொடரும். கடந்த 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது நான் அதிக ரன்னை குவித்தேன். ஆனால், அதில் நாங்கள் தோற்றுவிட்டதால் மகிழ்ச்சி இல்லை. உங்கள் பங்களிப்பால் ஒரு அணி வெற்றி பெறும் போதுதான் திருப்தி ஏற்படுகிறது.
நான் எப்படி விளையாட வேண்டும் என்பதை என் மனதில் தெளிவாக தீர்மானித்துள்ளேன். அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
What's Your Reaction?






