மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. அனைவரும் வெட்கப்பட வேண்டும்.. நீதிபதி வேதனை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செளமியா அன்புமணி தலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற இருந்தது. ஏற்கனவே அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, மாணவர் இயக்கங்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கும் சென்னை காவல்துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர். இந்தநிலையில் இன்று காலை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்தனர்.
ஆனால் காவல்துறையினர் வழக்கம்போல் அனுமதி வழங்காமல் மறுத்துவிட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக வள்ளுவர் கோட்டம் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார்.
போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் என்று கூறினார். மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தை அனைவரும் அரிசியலாக்கி வருகிறார்கள்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்றம் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று வேதனை தெரிவித்த நீதிபதி போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது உத்தரவிட்டார்.
இதனிடையே, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?