தனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை.. யூடியூபர் இர்ஃபான் விளக்கம்
யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல யூடியூபரான இர்ஃபான் பல்வேறு உயர்தர உணவகங்களுக்கு சென்று அதன் உணவுகளை ரிவியூ (Review) செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து, பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார். இவ்வாறு யூடியூபில் வீடியோ பதிவிடுவதில் பிசியாக உள்ள இர்ஃபான் சமீபகாலமாக சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் இர்ஃபானின் மனைவி ஆசிபா கருவுற்றிருந்தார். அப்போது துபாயில் சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட இர்ஃபான் இதுதொடர்பான வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இந்தியாவில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவது பாலின தேர்வு தடைச்சட்டம் 1994-இன் படி தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சில வெளிநாடுகளில் குழந்தையின் பாலினத்தை அறிவதில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து இர்ஃபான் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரனைச் சந்தித்து விளக்கம் அளித்து, மன்னிப்பு கேட்டார். ஒரு வழியாக இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில், இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
அதாவது , தனது மனைவி ஆசிபாவை பிரசவத்திற்காக சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த இர்ஃபான் குழந்தையின் தொப்புள் கொடியை தானே கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இச்செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி தவறு என்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களே இந்த செயல்களில் ஈடுபட வேண்டும் என்று பலரும் கருத்துகளை வெளியிட்டனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்ததையடுத்து இதற்கு விளக்கம் கேட்டு இர்ஃபான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இச்சம்பவம் தொடர்பாக இர்ஃபானுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சுகாதாரத்துறைக்கு இர்ஃபான் கடிதம் அனுப்பினார். மன்னிப்பு கேட்டாலும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இர்ஃபானுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் தான் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை என்று பலரும் விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் உடன் நான் புரோமோஷனுக்காக மட்டும் தான் வீடியோ வெளியிட்டேன். அதை தவிர்த்து அவர் எனக்கு எந்த சலுகையும் செய்து தரவில்லை. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில் தான் நீதிமன்றம் செயல்படுகிறது என்று இர்ஃபாம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?