”அவரு டி சர்ட் போட்டா அதிமுகவினர் ஏன் பயப்படுறாங்க?” – அமைச்சர் முத்துசாமி கேள்வி!
உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 3.52 கோடி ரூபாய் மதிப்பிலான 8 புதிய பேருந்துகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் ஏன் அ.தி.மு.க.வினர் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க.வினர் கையில் பச்சை குத்திகொண்டு இருக்கிறார்களே அதை குற்றமாக சொல்லலாமா? அரசின் மீது குற்றம் எதையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இதனை குற்றமாக சொல்லி வருகிறார்கள்” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், செந்தில் பாலாஜி கொண்டு வந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு ரசீது போடுவது, 500 சதுர அடியில் கடை அமைப்பது போன்ற திட்டங்களை தான், மதுவிலக்கு துறையில் இருந்த போது செயல்படுத்தியதாகவும், தற்போது அவரிடம் அந்த துறை திரும்ப சென்றுள்ளதால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறினார்.
மேலும், ”அமைச்சர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதில் சீனியர் அமைச்சர், ஜூனியர் அமைச்சர் என்ற வித்தியாசம் கிடையாது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் அருகில் இருப்பதால் அமைச்சர் சாமிநாதனுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சாமிநாதன் தி.மு.க. மாவட்ட செயலாளராக இல்லாததால், அவரால் அந்த பொறுப்புகளை சிறப்பாக பணியாற்ற முடியும். ஏற்கனவே கோவை மாவட்டம் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட சிரமத்தை உணர்ந்துள்ளேன்” என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
What's Your Reaction?