சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. பதிலில் ட்விஸ்ட் வைத்த எடப்பாடி பழனிசாமி!
''விஜய்யின் கட்சி பாடலில் எங்களது தலைவர்கள் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன். அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால்தான் கட்சி தொடங்க முடியும், கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கு முன்பு பிரம்மாண்ட மாநாடு நடத்த இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகப்படுத்திய விஜய், கட்சியின் பாடலையும் வெளியீடு செய்தார். தவெக கொடி, கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தவெக கொடி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தவெக கொடி பகுஜன் சமாஜ் கொடி போல் இருப்பதாகவும், கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் லோகோ போல் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் ட்ரோல் செய்து வருகின்றனர். அதே வேளையில் விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ''நடிகர் விஜய் தவெக கொடியை அறிமுகம் செய்துள்ளார். அவரது கட்சி பாடலில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இடம்பெறுள்ளன. இதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ''விஜய்யின் கட்சி பாடலில் எங்களது தலைவர்கள் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன். அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால்தான் கட்சி தொடங்க முடியும், கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது'' என்றார். தொடர்ந்து ''2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே கூட்டணி அமையுமா?'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி, ''விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. விஜய்யுடன் கூட்டணி அமையுமா? இல்லையா? என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவாகும்'' என்று தெரிவித்தார். ஏற்கெனவே 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியும் , சீமானின் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
தற்போதும் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆகவே பலம்வாய்ந்த திமுகவை எதிர்க்க அதிமுக-நாம் தமிழர் கட்சி- தவெக கூட்டணி சேருமா? என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?






