அரசியல்

"நாவை அடக்கிப் பேச வேண்டும்"- விஜய்யை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ!

நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம் என தவெக தலைவர் விஜய்க்க எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொந்தளித்துள்ளார்.


Vijay and Sellur Raju
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் 'களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்' என்று கூறியது அதிமுக தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் இந்தக் கருத்துக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார்.

'எல்லோரும் எம்ஜிஆராக முடியாது'

இதுகுறித்து மதுரையில் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், "தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம்; எல்லோரும் எம்ஜிஆராக முடியாது. நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஒரே சந்திரன்... ஒரே எம்ஜிஆர்தான்

'நாவை அடக்கி பேச வேண்டும்'

எங்களை களத்தில் இல்லை என சொல்ல எவ்வளவு தைரியம். நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம். விஜய் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுளார் ? அவருக்கு என்ன பின்புலம் ? . எத்தனை இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டு இருக்கிறார்" என விஜய்க்கு எதிராக தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.