அரசியல்

இது துறைக்கான கடமை; கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

எங்கள் கடமையைதான் செய்து வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.

இது துறைக்கான கடமை; கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி

தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று (ஆகஸ்ட் 24), இன்று (ஆகஸ்ட் 25) என 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறுகிறது. “ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்; அவற்றுக்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை” என மாநாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் “மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. பதிலில் ட்விஸ்ட் வைத்த எடப்பாடி பழனிசாமி!

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இந்த அரசு எல்லோருக்குமான அரசு. இந்த முருகர் மாநாட்டை பொறுத்தவரை முக்கியமாக முருகர் பக்தர்களால் கொண்டாடப்படக்கூடிய நிகழ்ச்சி. இது முழுக்க அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சேர்ந்து நடத்தும் விழா ஆகும். இந்த துறைக்கு அந்த கடமை இருக்கிறது. அதைதான் நாங்கள் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.