'ஆறறிவு உள்ளவர்போல் சீமான் பேசவில்லை.. கலைஞரை பேச அவருக்கு தகுதியில்லை'.. மனோ தங்கராஜ் தாக்கு!
''கலைஞர் கருணாநிதி குறித்து பேசுவதற்கு சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது மேடையில் பேசும்போது வார்த்தையில் கவனம் வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா?''
சென்னை: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூர் சாட்டை துரைமுருகன், நேற்று முன்தினம் தென்காசியில் வைத்து கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர் அவதூறாக பாடல் பாடியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்பு சாட்டை துரைமுருகனை காவலில் வைக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ''யாரோ எழுதிய, வெளியிட்ட பாடலைதான் சாட்டை துரைமுருகன் பாடியுள்ளார். பிறகு அவர் ஏன் அவரை கைது செய்தீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கலைஞர் கருணாநிதி குறித்த 'சண்டாளன்' என்ற சர்ச்சை பாடலை பாடிய சீமான், 'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்' என்று போலீசுக்கு சவால் விடுத்தார். 'சண்டாளன்' என்று உச்சரித்தன்மூலம் சீமான் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை அவமானப்படுத்தி விட்டார் என்று திமுகவினர், கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டினார்கள். மேலும் கலைஞர் கருணாநிதியை அவதூறு செய்து விட்டார் எனக்கூறி சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சீமான், ''சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பதே எனக்கு தெரியாது. இதை வழக்கு மொழியாகதான் நான் பேசினேன். சண்டாளன் என்ற வார்த்தை கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதி அதிகம் பயன்படுத்தியுள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தில் 'சண்டாளன்' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருமூலரும் சண்டாளர் வார்த்தை பயன்படுத்தி உள்ளார். சண்டாளர் வார்த்தையை பயன்படுத்தியது மூலம் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?'' என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கலைஞர் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தவர். யாராக இருந்தாலும் அவரைப்பற்றி அளந்து பேச வேண்டும். ஆறு அறிவு உள்ளவர் பேசுபவது போல் சீமானின் பேச்சு இல்லை.
சீமான் மீண்டும் ஒருமுறை பிறந்து வளர்ந்தால் கூட கலைஞர் கருணாநிதியின் செயலுக்கு ஈடாக முடியாது. ஆகவே குறைந்தபட்ச மரியாதை உடன் சீமான் பேச வேண்டும். இவர் போன்றவர்கள் இதுபோன்று பேசி தங்களது மரியாதையை இழக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி குறித்து பேசுவதற்கு சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது?
மேடையில் பேசும் போது வார்த்தையில் கவனத்துடன் பேச வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. கருத்து சுதந்திரத்தைப் பற்றி திமுகவிற்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், '' சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர், நாம் தமிழர் கட்சியினர் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?