தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. பைக்குடன் பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலைகளும் முறையாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அது வெளியே தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. பைக்குடன் பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி!
young girl died

சென்னை: சென்னை ஐ.சி.எப் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். ஏசி மெக்கானிக். இவர் நேற்று இரவு தனது சகோதரி ஹேமமாலினியை, பைக்கில் அழைத்துக்கொண்டு, சென்னை திருமங்கலம், 18வது பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், சாலையில் பெரிய பள்ளம் இருந்துள்ளது. மழைநீர் முழுவதும் அந்த பள்ளத்தில் தேங்கியதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியவில்லை. அப்போது வெங்கடேசன் வந்த பைக் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. 

இதில் பைக் நிலைதடுமாறி இரண்டும் பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று, ஹேமமாலினி மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  வெங்கடேசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசர், சம்பவ இடத்துக்கு வந்து ஹேமமாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

சாலையில் இருந்த பெரும் பள்ளத்தில் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மழைநீர் தேங்கி நின்றதால், பள்ளம் தெரியாத நிலையில் பைக் தடுமாறி விழுந்து அண்ணன், தங்கை விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த விஷயம் வெளியே தெரிந்து விடாமல் இருக்கவும், தங்கள் மீதான தவறினை மறைக்கும் முயற்சியாகவும் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் அந்த பள்ளத்தை மூடியதாக கூறப்படுகிறது.

ஹேமமாலினி உடன் படித்த தோழியின் திருமணத்துக்கு சென்றுவிட்டு வரும்போது விபத்தில் உயிரிழந்துள்ளார். எம்.காம் படித்துள்ள அவர் தனது பட்டமளிப்பு விழாவுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்வதாக கூறியிருக்கிறார். ''ஆனால் இப்போது எனது மகள் இல்லை. இனி எப்போது அவள் வருவாள்'' என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க கூறியுள்ளனர். 

சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலைகளும் முறையாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அது வெளியே தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். 

இந்த பள்ளம் தற்போது ஒரு உயிரையே பறித்துள்ளது. இனி மழைக்காலம் என்பதால் சென்னை மாநகராட்சி  அதிகாரிகள், குண்டுகுழியுமாக உள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதே போல் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக பைக்கில் சென்ற மென்பொருள் பொறியாளர் ஷோபனா தவறி விழுந்து லாரி மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.