ஒட்டு போட்டவர்களுக்கு போட்டு அனுப்புறாங்க.. மார்கெட்டிங் தான் நடக்குது - தமிழிசை தாக்கு

திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Oct 18, 2024 - 02:16
 0
ஒட்டு போட்டவர்களுக்கு போட்டு அனுப்புறாங்க.. மார்கெட்டிங் தான் நடக்குது - தமிழிசை தாக்கு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் கடந்த செவ்வாய் அன்று 12 முதல் 20 செ.மீ., மழை பெய்தது. இதனால் பல பகுதியில் நீர் தேங்கி, தெருக்களை வெள்ளம் சூழ்ந்தது. பின், மழை நின்றதால் நீர் வடியத் துவங்கியது.

இந்நிலையில், தென் சென்னை, வார்டு 189க்கு உட்பட்ட பள்ளிக்கரணை, காமகோட்டி நகர், சாய் பாலாஜி நகரில், மழைநீர் வடியாமல் உள்ள பகுதிகளை தமிழக பாஜக மூத்த தலைவ‌ர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவ‌ர் சவுந்தரராஜன், “சென்னையில் பிரதான சாலையில் மட்டுமே நீர் தேங்கவில்லை. உட்புற பகுதியில் இப்போதும் முட்டளவு நீர் வடியாமல் உள்ளது. அதில் சாக்கடையும் கலந்துள்ளது. ஆனால், காய்ந்த ரோடுகளும், வடிந்த வெள்ளமும்தான் வெள்ளை அறிக்கை என்று உதயநிதி கூறியுள்ளார். அதை குற்ற அறிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.

தி.மு.க., அரசு கடந்த மூன்றரை வருட ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. ஒரு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள், வசிக்கும் மக்கள், பயன்பாட்டில் உள்ள கார்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த அரசு ஒரு திட்டமும் வகுக்கவில்லை. திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை. அறிவியல் பார்வை இல்லை. அரசியல் பார்வைதான் உள்ளது.

செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல், ‘மார்கெட்டிங்’ மட்டும்தான் நடக்கிறது. கடந்த ஆண்டு, மழை வருவதற்கு முன், 4000 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள வடிகால்கள் நன்றாக வேலை செய்கின்றன என்றார்கள். ஆனால், மழை பெய்தபோது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது, தமிழக முதலமைச்சரே 30 சதவீத வடிகால் பணிகள் முடியவில்லை என்று பேட்டி அளித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேட்ட கேள்விக்கு, 40 சதவீத வடிகால் பணிகள் முடியவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான். சென்னையில் 10 முதல் 20 செ.மீ., மழைக்கே நீர் தேங்குகிறது என்றால், மழை அதிகமாக பெய்தால் என்னவாகும்? மக்கள் திமுகவிற்கு ஒட்டு போட்டார்கள். பதிலாக இந்த அரசு போட்டு (படகு) அனுப்பி வைக்கிறது.

நீர் மேலாண்மை அறிவியல் பூர்வமானது. தி.மு.க., அரசிடம் அது குறித்த புரிதல் இல்லை. மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம். ஆனால், மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த அரசு மீது மக்கள் எப்படிப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு, மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களே சாட்சி என்றும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow