என்னது, ஹேமா கமிட்டியா? கருத்து சொல்லணுமா? ‘நோ… நோ...’ அலறி அடித்து வேகமாக ஓடும் கோலிவுட் பார்ட்டிகள்
Hema Committee Report in Malayalam Film Industry : சென்னை வந்த ரஜினியிடம் ஹேமா கமிட்டி குறித்த கேள்வி கேட்கப்பட, எனக்கு அது பற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.அந்த பதில் விவாதம் ஆகியுள்ளது. இன்னமும் தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் உட்பட பல ஹீரோக்கள் இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. த.வெ.க தலைவர் விஜய் தனது சமூகவலைதளத்தில் கூட எந்த கருத்தும் சொல்லவில்லை.
Hema Committee Report in Malayalam Film Industry : கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின் களேபரமே நடக்கிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், பிரபல திரையுலப்பிரபலங்கள் மீது சில நடிகைகள் பாலியல் புகார் கொடுத்தது, அந்த மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள போலீசிலும் சில நடிகைகள் புகார் கொடுத்துள்ளனர். அங்கே சட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த விவகாரம் குறி்த்து விசாரிக்க ஒரு கமிட்டியை ஏற்படுத்தியுள்ளது கேரள அரசு. நாளுக்கு நாள் இந்த விவகாரம் பெரிதாகிக்கொண்டே வருகிறது. மலையாள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டுவிட்டது. அந்த சங்க தலைவராக இருந்த மோகன்லால், ஒட்டு மொத்த நிர்வாகிகளுடன் பதவி விலகினார். தினமும் ஒரு திரைப்பிரபலம் மீது ஒரு நடிகை பாலியல் புகார் சொல்வது தொடர்கிறது.
மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், மூத்த கலைஞர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை தேவை என்று குரல் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் இப்போது அரசியல் ஆகியுள்ளது. கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட், முன்பு ஆண்ட காங்கிரஸ் மீது அங்குள்ள பாஜ நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் ஹேமா கமிட்டி தாக்கம் இருக்கிறது. தமிழ் நடிகரான ரியாஸ்கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டை ரேவதி என்ற நடிகை சுமத்த, நான் அவனில்லை என்று மறுத்துள்ளார் ரியாஸ்கான். நேற்று கூட நடிகை சர்மிளா தன்னை ஒரு மலையாள தயாரிப்பாளர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியலுக்கு முயன்றதாக பரபரப்பு புகார் எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் குறித்து தமிழ் நடிகர்கள், கோலிவுட் பார்ட்டிகளிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகர் சங்க செயலாளர் விஷால் இது குறித்து விரிவாக பேசியுள்ளார். தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஆனால், நடிகர் பொருளாளரான கார்த்தி, கோவையில் நடந்த மெய்யழகன் பட விழாவில் ஹேமா கமிட்டி குறித்த கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. அதேபோல், தேனியில் நடந்த விழாவில் ஹேமா கமிட்டி குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆகி, உங்களுக்கு அறிவில்லையா என்று நிருபரிடம் பாய்ந்துள்ளார் நடிகர் ஜீவா
சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் நடிகை அபிராமியும் இது அந்த விஷயம் பற்றி பேச சரியான இடமல்ல என்று எஸ்கேப்பாகியுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியாவும் இது குறித்த கேள்விக்கு நோ கமென்ட்ஸ் என்று கூறியுள்ளார். இதைவிட முக்கியமாக கூலி படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த ரஜினியிடம் ஹேமா கமிட்டி குறித்த கேள்வி கேட்கப்பட, எனக்கு அது பற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.அந்த பதில் விவாதம் ஆகியுள்ளது. இன்னமும் தமிழ்சினிமாவில் கமல்ஹாசன் உட்பட பல ஹீரோக்கள் இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. த.வெ.க தலைவர் விஜய் தனது சமூகவலைதளத்தில் கூட எந்த கருத்தும் சொல்லவில்லை. பல முன்னணி ஹீரோக்கள கப்சிப். அதேசமயம், நடிகைகளில் ராதிகா, குஷ்பு, சமந்தா. ஊர்வசி உட்பட பலர் தைரியமாக கருத்து தெரிவித்துள்ளனர். சில நடிகர், நடிகைகள் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் தை ரியமாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், 90 %பேர் ஒதுங்கியே இருக்கிறார்கள்.
நாம் ஏதாவது பேசினால், அது தவறுதலாக வர வாய்ப்பு என்று சிலர் ஒதுங்குகிறார்கள். ஒரு சிலர் நமக்கு ஏன் வம்பு என்று எஸ்கேப் ஆகிறார்கள். பெரும்பாலான நடிகர்கள் இதுரொம்பவே சென்ஸ்டிவ் ஆன விவகாரம். நாம் ஒதுங்கி இருப்போம். அமைதியாக இருப்போம் என்று நினைப்பதால், நோ...நோ கமென்ட்ஸ் என்று ஓடுகிறார்கள். இப்பவெல்லாம் ‘ஒரு நிமிஷம்’ என்று மைக் நீட்டினாலே ‘ஐய்யய்யோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதா’ என்று பதட்டமாகிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?