ராகவா லாரன்சின் உதவியாளர் எனக்கூறி மோசடி.. ஆன்லைன் மோசடிகளை பற்றி படித்ததாக வாக்குமூலம்
நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலமாக நடைபெறும் சைபர் கிரைம் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் சைபர் கிரைம் கும்பல் பல்வேறு நூதன முறையில் பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடிகளைப் பற்றி தெரிந்துகொண்டு, சைபர் கிரைம் மூலம் பணம் மோசடியில் என ஈடுபட்ட நபரை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த வீரராகவன் என்ற நபர் கடந்த 4-ஆம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். வீரராகவன் தனது குழந்தைகள் படிப்பிற்காக ஆன்லைன் மூலம் உதவி கேட்டதாக தெரியவந்துள்ளது இதை வைத்துக் கொண்டு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை அணுகி, பிரபல நடிகர் 'ராகவா லாரன்ஸ்’ அவர்களின் உதவியாளர் என சொல்லி வீரராகவனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார்.
மேலும் தங்களது பிள்ளைகளின் படிப்பு செலவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கு ரூபாய் 8,675 பணத்தினை Phone Pay மூலமாக அனுப்புமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீரராகவன், இந்த பணம் எதற்கு என்று கேள்வி கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு மொத்தமாக உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உண்டான ரூபாய் அனுப்பவுள்ளதாகவும், அதற்கு தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்பதற்காக இந்த தொகையினை செலுத்துமாறு தெரிவித்துள்ளார். அதனை நம்பிய வீரராகவன் அந்த நபர் கூறிய போன் பே (phone pay) மூலம் பணத்தினை அனுப்பியுள்ளார்.
பின்னர் மீண்டும் வீரராகவனை தொடர்பு கொண்டு அந்த நபர் ராகவா லாரன்ஸ் அவர்களின் தொண்டு நிறுவனத்தில் வங்கி கணக்கு துவங்க வேண்டும், அதற்கு மீண்டும் ரூ.2,875 அனுப்புமாறு கூறியுள்ளார், அதனை நம்பி மீண்டும் பணத்தை அனுப்பிய வீரராகவனுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் வீரராகவனை தொடர்பு கொண்ட அந்த நபர், உங்கள் குழந்தைகளின் மொத்த படிப்புக்கான செலவு மூன்று லட்ச ரூபாய் வரை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் அதனால் ரூபாய் 50,000 பணத்தை அனுப்பி வைத்தால் தங்கள் குழந்தையின் மொத்த படிப்பு செலவையும் தங்களின் தொண்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதையும் நம்பிய வீரராகவன் ரூபாய் 50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் மறுபடியும் போன் செய்த அந்த நபர், தற்போது அந்த Scheme முடிந்துவிட்டதாகவும், ரூபாய் 30,000 அனுப்பினால், ரூபாய் 80,000 செலுத்தினால் கல்லூரி படிப்பு வரை தொகை கிடைக்க வழிவகை செய்வதாக கூறியுள்ளார். தொடர்ந்து பணத்தை மட்டுமே கேட்டு வருவதால் விசாரணை செய்த போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து வீரராகவன் சுதாரித்துக் கொண்டு, ரூபாய் 61,550 ருபாயை மோசடியாக பெற்று ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர கோரி காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கியுள்ளார்.
புகாரியின் அடிப்படையில் வழக்குப்பதிந்த எழும்பூர் காவல் துறையினர் திருவல்லிக்கேணி சைபர் கிரைம் காவல் குழுவினர் உதவியுடன், நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் தினேஷ் என்ற நபரை கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் இருந்து ரூபாய் 60,000 பணத்தை கைப்பற்றி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் பத்தாம் வகுப்பு மற்றும் படித்த தினேஷ் குமார், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார். பெண் ஒருவருடன் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தினேஷ் குமார் செலவுக்காக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்து இதுபோன்ற வழியில் இறங்கியதாக கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ஆன்லைன் சைபர் க்ரைம் மூலமாக பொதுமக்களை போன் மூலமாகவே பேசி ஏமாற்றி பணத்தை மோசடி செய்ய முடியும் என கற்றுக் கொண்டதாகவும் பலரும் தொடர்ந்து ஏமாறுவதால் இதுபோன்ற வழியில் ஏற்கனவே வேலூரில் 2 முறை மோசடி செய்து வழக்கில் கைதானதாகவும் தெரியவந்துள்ளது. அந்த அடிப்படையில் ஆன்லைனில் உதவி கேட்கும் நபர்களை தேடி இதுபோன்று சைபர் க்ரைம் மோசடிகள் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறிப்பாக மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விதமாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் இணையதளங்கள் மூலமாகவும் உதவி கேட்கும் நபர்களை தேடி பிடித்து அவர்களுக்கு ஏற்றார் போல் பேசி அறக்கட்டளையிலிருந்து உதவிக்கான பணத்தை அனுப்புவதாக கூறி பல ஆயிரக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரை பயன்படுத்தி இளைஞர் செய்துள்ள இந்த நூதன மோசடி சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து இதுபோன்று எத்தனை நபர்களை என்னென்ன பேரில் ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து கண்டுபிடிக்க தினேஷை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?