தமிழ்நாடு

கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்

தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாக மாறி வரும் சூழ்நிலையில், கால்நடை விவசாயிகளுக்கு பேரிடர் கால நிவாரண இழப்பீட்டினை வழங்க அமைச்சர் வேண்டுக்கோள் விடுத்திருந்தார். இந்நிலையில், பேரிடர் கால நிவாரண இழப்பீடு எந்த வகையில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு உதவும்? என கேள்வி எழுப்பியதோடு இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி செய்தியறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு-

”கடந்த ஏழு மாதங்களில் திருப்பூர் - ஈரோடு மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்துள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 850-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதிகளில் வெறிநாய்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் சரியான வகையில் கட்டுப்படுத்தாததால் விவசாயிகளுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் பலமுறை விவசாயிகள் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக்கோரி அறவழியில் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள், இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் செய்தித் துறை அமைச்சரும், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரிடர் நிவாரணத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பேரிடர் நிவாரண இழப்பீடு: எப்படி கட்டுப்படியாகும்?

பேரிடர் நிவாரண இழப்பீடு  கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 20 கிலோவிற்கு மேற்பட்ட ஆடுகளும், மூன்று கிலோவுக்கு மேற்பட்ட கோழிகளும் இறந்துள்ளன, ஒரு ஆட்டு குட்டி கூட 4000 ரூபாய்க்கு வாங்க முடியாது, பிராய்லர் கோழி கிலோ ரூ.220-க்கு விற்கிறது. நாட்டுக்கோழியும், ஆட்டுக்கறியும் ரூ.800-க்கு சந்தையில் விற்று வரும் நிலையில், கோழிகளுக்கு ரூ.100 என்பதும், ஆடுகளுக்கு ரூ.4,000 என்பதும் சரியான இழப்பீடு அல்ல.

ஒரு விவசாயின் மகனாக, கால்நடைகள் வளர்ப்புக்கு புகழ்பெற்ற பகுதியில் இருந்து வந்த சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கோழிகளுக்கு ரூ. 100, ஆடுகளுக்கு ரூ. 4,000 என்கிற இழப்பீடு சரியா என சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா ?, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பரிந்துரை செய்துள்ள இழப்பீட்டை கொண்டு இறந்துபோன கோழிகளை, ஆடுகளை வாங்கிவிட முடியுமா? மாண்புமிகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இந்த பரிந்துரை விவசாயிகளிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெருகும் தெரு நாய்கள்: யார் பொறுப்பு?

நாய்களுக்கு உரிமம் வழங்குவது, வளர்ப்பை ஒழுங்குபடுத்துவது, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது, வெறிநாய்களை கண்காணித்து அழிப்பது என அனைத்தும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசு தனியாக விதிகளை வகுத்து அளித்துள்ளது. விதிகளை சரியாக உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்படுத்தாததால்தான் தற்போது தெருநாய்கள் பெருகி வெறி நாய்களாக கால்நடைகளை கடித்து குதறுகின்றன, சட்டப்படி கடமையை செய்யாத உள்ளாட்சி நிர்வாகங்களே விவசாயிகளுக்கு ஏற்படுகிற இழப்புகளுக்கு இழப்பீடு கொடுக்க கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

Read more: பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000- ஆண் குழந்தைக்கு பசு மாடு: எம்.பி அதிரடி அறிவிப்பு

எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக மறு ஆய்வு செய்து தலைமைச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி உள்ள மேற்கண்ட கடிதத்தை திரும்பப் பெற்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில், அதாவது இறந்த ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு எடை அடிப்படையில் கிலோவுக்கு ரூ. 500-யினை  சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலமாக அரசாணை பிறப்பித்து வழி காண வேண்டுமாய் கால்நடைகளை இழந்து வறுமையில் வாடும் விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more: கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!