பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000- ஆண் குழந்தைக்கு பசு மாடு: எம்.பி அதிரடி அறிவிப்பு
தனது தொகுதியில் 3-வது குழந்தையாக பெண் குழந்தை பெற்றால் ரூ.50,000, ஆண் குழந்தை பெற்றால் பசு மாடு வழங்கப்படும் என ஆந்திர எம்.பி அளித்த வாக்குறுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிலுள்ள தென் மாநிலங்களில் அரசியல் ரீதியான ஹாட் டாபிக் என்றால் அது மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தான். எந்த மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என மத்திய அமைச்சர்களின் தரப்பில் கூறப்பட்டாலும், சில வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு இன்று வரை யாரும் தெளிவான விளக்கம் தரவில்லை. ஒருவேளை வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் பன்மடங்கு குறைய வாய்ப்புள்ளது.
மக்கள் தொகையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்தமைக்கு மத்திய அரசு தரும் தண்டனையா? என தென் மாநில முதல்வர்கள் கேள்வி எழுப்பி வரும் சூழ்நிலையில், ஆந்திர முதல்வர் இன்னும் ஒரு படி மேலே சென்று அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என பொது மேடையில் அதிரடியாக பேசினார்.
3-வது குழந்தை: பெண்களுக்கு ஊக்கத்தொகை
இந்நிலையில் தான் தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் மக்களவைத் தொகுதி எம்.பி. காளிசெட்டி அப்பலநாயுடு மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்: 3-வது குழந்தை பெண் குழந்தையாக இருப்பின் ரூ.50,000, ஆண் குழந்தையாக இருப்பின் பசு மாடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் அப்பலநாயுடு. இந்த சலுகை மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகப்பேறு விடுப்பு: குழந்தை எண்ணிக்கை கணக்கில்லை
மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக பேசியதைத் தொடர்ந்து எம்.பி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், மார்காபூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று சந்திர பாபு நாயுடு முன்னர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பக் கட்டுப்பாடு குறித்த தனது நிலைப்பாடு முற்றிலும் மாறிவிட்டதாக சந்திர பாபு நாயுடு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Read more: மகிளா சம்ரிதி யோஜனா: பெண்களுக்கு மாதம் ரூ.2500- வெளியானது சூப்பர் அப்டேட்!
"அனைத்து பெண்களும் முடிந்தவரை அதிகமான குழந்தைகளைப் பெற வேண்டும்" என்று முதல்வர் சந்திரபாபு கூறிய நிலையில், மகப்பேறு விடுப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரசவங்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு சனிக்கிழமை தெளிவுப்படுத்தினார். இதுவரை, பெண் ஊழியர்கள் இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே முழு ஊதியத்துடன் கூடிய ஆறு மாத மகப்பேறு விடுப்பைப் பெற்று வந்தனர். இந்தச் சலுகை இப்போது அனைத்து பிரசவங்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளார். இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜயநகரம் நாடாளுமன்ற உறுப்பினர் காளிசெட்டி அப்பலநாயுடு சர்வதேச மகளிர் தினத்தன்று விஜயநகரத்தில் உள்ள ராஜீவ் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது தான், மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். "ஒரு பெண் மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால், எனது சம்பளத்திலிருந்து ரூ. 50,000 வழங்கப்படும். குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், ஒரு பசுவை அவர்களிடம் வழங்குவேன்" என்றார். இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில், குறிப்பாக வாட்ஸ்அப்பில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் ரணஸ்தலம் மண்டலத்தில் உள்ள கட்சி ஆர்வலர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதைப் பரவலாகப் பகிர்ந்துள்ளனர்.
Read more: கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!
What's Your Reaction?






