நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி...நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சின்போது, ''நாடு முழுவதும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தை சேர்ந்தவர்களே வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பதவியில் இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

Jul 1, 2024 - 14:07
Jul 1, 2024 - 14:35
 0
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி...நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே!
மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: பிரதமர் மோடி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றம் 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை  தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கி வைத்தார். 

அப்போது இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர், 

பின்பு நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது காங்கிரஸ் தேசிய தலைவரும், எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கேபேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரை எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இன்றி அரசை பாராட்டுவதாக மட்டுமே இருந்தது. ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் நலன்கள் குறித்து குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெறவில்லை.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தி, சட்டமேதை அம்பேத்கரின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்கும்படி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கரை கேட்டுக் கொள்கிறேன். 

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளதால், இந்த தேர்வை எழுதியவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 70 தேர்வுகளின் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்துள்ளன. ஆனால் இது குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து கவலை கொள்ளாத பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். கோஷங்களை எழுப்புவதில் மட்டும் பிரதமர் மோடி கில்லாடி. ஆனால் மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிந்தும், கடந்த ஓராண்டில் ஒருமுறை கூட பிரதமர் மோடி  அங்கு செல்லவில்லை'' என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த 'அக்னிவீர்' திட்டம் குறித்து பேசிய கார்கே, ''எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் கொண்டு வரப்பட்ட  'அக்னிவீர்' திட்டம் இளைஞர்களின் மனஉறுதியை நொறுக்கியுள்ளது. ஆகவே மத்திய அரசு  'அக்னிவீர்' திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்'' என்றார்.

மேலும் மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சின்போது, ''நாடு முழுவதும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தை சேர்ந்தவர்களே வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பதவியில் இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஜெகதீப் தங்கர், ''ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பது என்ன கிரிமினல் குற்றமா? ஆர்எஸ்எஸ் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறது. ஆர்எஸ்எஸில் இருந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர்'' என்று பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow