நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுப்பு... எதிர்க்கட்சிகள் அமளி-வெளிநடப்பு... மக்களவையில் பரபரப்பு!

டெல்லி: நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுத்ததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Jul 1, 2024 - 13:04
Jul 2, 2024 - 12:18
 0
நீட் முறைகேடு குறித்து விவாதிக்க மறுப்பு... எதிர்க்கட்சிகள் அமளி-வெளிநடப்பு... மக்களவையில் பரபரப்பு!
Lok Sabha Opposition Party Walkout in Parliament

மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை கடந்த 24ம் தேதி கூடியது. இதில் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கடந்த 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார். இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது.

கூட்டம் தொடங்கியதும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை  தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.

அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, ''குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்தபிறகு, நீட் தேர்வு குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படும்'' என்றார். ஆனால் இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதன்பிறகு பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''பாரம்பரியம் மற்றும் விதிமுறைகளின்படி நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு, எந்த விவகாரம் குறித்தும் எதிர்கட்சிகள் விவாதம் மேற்கொள்ளலாம்'' என்று தெரிவித்தார். 

ஆனால் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின்பு இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனைவரும் நாடளுமன்ற வளாகத்தில் திரண்டு, 'மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை தவறாக வழிநடத்துகிறது' எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாநிலங்களவையிலும் நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ''எதிர்க்கட்சி எம்பிக்கள் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசும்போது அவர்களின் மைக் அணைக்கப்படுகிறது'' என்று குற்றம்சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ''இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மைக்குகளுக்கான கண்ட்ரோல் என்னிடம் இல்லை'' என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow