தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி கோலாகலம்.. பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்..!
தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரையை முன்னிட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை அடுத்த அறுபத்துமூவர் பேட்டை கிராமத்தில் உள்ள சப்தகன்னி கோயிலில் அமர்நாத் பனிலிங்கம் போன்று 6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து சிவராத்திரி வழிபாடு செய்தனர். விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே முட்டம் ஸ்ரீமஹாபலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் 4 கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கண்விழித்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை பெரும்பாக்கம் வைத்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஸ்ரீ பாலைவன நாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 11ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு நடனமாடினர். கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் நாட்டியாஞ்சலியை கண்டு ரசித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள தொட்டம்மா சின்னம்மா மகாலட்சுமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தனக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ காலப்பைரவர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது. வெள்ளி கவசத்துடன் காட்சியளித்த கால பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல சூரன்குட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சௌர்ண கர்ஷன பைரவர் கோயிலிலும் மகா சிவாராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை யொட்டி சிவலிங்க வடிவில் ஆயிரத்து 8 சங்குகளை வைத்து பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?






