ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்... உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர். இதேபோல், சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் தரிசனத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 31வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்வில், தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டத்தில் இறங்கி, நீரைத் தெளித்து அமித்ஷா வழிபட்டார்.
இதையடுத்து நிகழ்வில் பேசிய அமித்ஷா, பிராயாக்ராஜில் மகா கும்பமேளா நிறைவு பெற்றதை சுட்டிக் காட்டும் வகையில் ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றதாக புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் பாடலுக்கு நடனமாடியும், கைதட்டியும் உற்சாகமாக கண்டு களித்தனர். தொடர்ந்து சத்குருவின் மகளான ராதே ஜக்கி, பக்தி பரவசத்தில்,அவருடன் இணைந்து நடனமாடினார்.
இதனை தொடர்ந்து, சத்குரு ஜக்கி வாசுதேவின் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனங்கள், சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளில், பொதுமக்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் தங்களை மறந்து கண்ணீர் விட்ட அழுதனர்.
இந்த நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ஒடிசா ஆளுநர் ஹரிபாபு, பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
இதேபோல், நடிகை நிக்கி கல்ராணி, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






