யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா.. 'எங்கேயோ இடிக்குதே'.. இதுதான் காரணமா?

UPSC Chairman Manoj Soni Resign : மனோஜ் சோனி கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்ற நிலையில், வரும் 2029ம் ஆண்டு வரை இவரது பதவிக்காலம் உள்ளது. ஆனால் இவர் திடீரென ராஜினாமா செய்தது ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Jul 20, 2024 - 14:49
Jul 20, 2024 - 15:03
 0
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா.. 'எங்கேயோ இடிக்குதே'.. இதுதான் காரணமா?
UPSC Chairman Manoj Soni Resign

UPSC Chairman Manoj Soni Resign : யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் உள்பட மத்திய அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. யுபிஎஸ்சியின் தலைவராக மனோஜ் சோனி இருந்து வந்தார். 

கடந்த ஆண்டு மே மாதம் 16ம் தேதி யுபிஎஸ்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

ஆனால் மனோஜ் சோனியின் ராஜினாமா கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருங்கிய நண்பரான மனோஜ் சோனி கடந்த 2017ம் ஆண்டு யுபிஎஸ்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

இவர் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்ற நிலையில், வரும் 2029ம் ஆண்டு வரை இவரது பதவிக்காலம் உள்ளது. ஆனால் மனோஜ் சோனி திடீரென ராஜினாமா செய்தது ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பயிற்சி ஐஏஏஸ் அதிகாரி பூஜா கேத்கர், மகாராஷ்டிராவில் பணியில் இருந்தபோது விதிகளை மீறி உதவி ஆட்சியர்களுக்கு உரிய சலுகைகளை பெற்றதாக புகார் எழுந்தது. அதாவது தனக்கு தனி அறை ஒதுக்கியதாகவும், விதிகளை மீறி சைரன் பொருத்தப்பட்ட காரை பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

மேலும் ஓபிசியில் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டை தவறாக பயன்டுத்தி பூஜா கேத்கர் ஐஏஏஸ் பணியில் சேர்ந்ததாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது யுபிஎஸ்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பூஜா கேத்கரின் விவகாரம் யுபிஎஸ்சி மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

பூஜா கேத்கர் மட்டுமின்றி பல்வேறு அதிகாரிகளும் தவறான சான்றிதழை சமர்பித்து ஐஏஏஸ் பணியில் சேர்ந்ததாகவும், தேர்வை நடத்துவதில் யுபிஎஸ்சி தோல்வி அடைந்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால் பூஜா கேத்கர் விவகாரம் தொடர்பாக யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்ததாக ஒருபக்கம் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதை வெளிப்படையாக மறுத்துள்ள மனோஜ் சோனி, ''பூஜா கேத்கர் விவகாரத்துக்கும், எனது ராஜினாமாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. ஆன்மிக பணிகளை செய்ய எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்துள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

''மனோஜ் சோனியின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது ராஜினாமா குறித்த உண்மையான தகவல் விரைவில் வெளிவரும். இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow