Sugarscane Juice Wanted Advertisement: நமது தமிழ்நாடு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மற்ற மாநிலங்களை விட ஒருபடி முன்னிலையில் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான உயர் கல்வி நிலையங்கள் உள்ளன.
அதுவும் தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன என்று சொல்லும் அளவுக்கு இன்ஜினீயரிங் கல்லூரிகள் புற்றீசல் போல பெருகி விட்டன. இதேபோல் கலை அறிவியல் மற்றும் அறிவியல் கல்லுரிகளும் அதிக அளவில் உள்ளன.
இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் இன்ஜினீயரிகள், மற்ற பட்டதாரிகள் பெருகி விட்டனர். இது ஒருபக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், தொடர்ந்து பெரும் வரும் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது.
தனியார் கல்லூரிகளில் பல லட்சங்களை கொட்டி இன்ஜினீயரிங் படித்த பட்டதாரிகள் இப்போது வேலை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் வேறு வழியின்றி கட்டட வேலை உள்பட இதர வேலைகளை பார்த்து வரும் நிலையில், வேறு சிலர் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தால்தான் செல்வோம் என்று விடாப்பிடியாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் இப்போது கட்டட வேலை, உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஜவுளிக்கடைகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதன் காரணமாக இந்த வேலையிலும் சேர முடியாமல் தமிழ்நாடு பட்டதாரிகள் பரிதவித்து வருகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க, 'கரும்பு ஜூஸ் பிழிய இளைஞர்கள் தேவை.. ரூ.18,000 சம்பளம் தரப்படும்' என்று மேற்கொள்ளப்பட்ட விளம்பரம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த கரும்பு ஜூஸ் கடை நடத்தும் உரிமையாளர் ஒருவர் தனது கடைக்கு கரும்பு ஜூஸ் பிழிய ஆட்கள் தேவை என்று கடைக்கு முன்பாக விளம்பர பதாகையை வைத்துள்ளார்.
அந்த விளம்பர பதாகையில் ''கரும்பு ஜூஸ் பிழிய இளைஞர்கள் தேவை.. மாதம் 18,000 ஊதியம் வழங்கப்படும்.. பிஇ, பிஎஸ்சி, பிஏ படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்" என குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு என்று அவரது செல்போன் எண்ணும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பர பதாகையை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வரும் நெட்டின்சன்கள், ''என்னங்க சொல்றீங்க.. கரும்பு ஜூஸ் பிழிய ரூ.18,000 சம்பளம் கொடுக்குறாங்களா?'' என்று கூறி வருகின்றனர். ''நம்ம என்னதான் பாடுபட்டு உழைத்தாலும், கம்பெனியில் 15,000க்கு மேல் சம்பளம் கொடுக்க மறுக்கீறார்கள். ஆனால் கரும்பு ஜூஸ் பிழிய இவ்வளவு சம்பளமா.. உடனே அந்த நம்பருக்கு கால் செய்துவிட வேண்டும்'' என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
''இன்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வேலைகிடைக்கவில்லை என்று புலம்பித் தள்ளும் இளைஞர்கள் தங்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, இதுபோன்ற வேலைகளை பார்க்கலாம்'' என்று ஒருசிலர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.