இந்தியா

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்.. மத்திய அரசு அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்.. மத்திய அரசு அறிவிப்பு!
Ladakh Gets 5 New Districts

ஜம்மு: இந்தியாவின் அழகிய மாநிலமான ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் இருந்த லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அதாவது ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தேர்தல் நடைபெற உள்ளதால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''யூனியன் பிரதேசமான லடாக்கை வளர்ச்சி அடைந்த மற்றும் செழிப்பான நகரமாக மாற்றுவது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையாகும். இந்நிலையில், லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி லடாக் மக்களின் வீட்டு வாசல்களுக்கே அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குகிறது'' என்று கூறியுள்ளார். 

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ''லடாக்கில் உருவாக்கப்பட்ட 5 புதிய மாவட்டங்கள் அங்கு செழிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத்தை நோக்கிச் செல்லும் படியாகும். இதன்மூலம் ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய மாவட்டங்கள் மக்களுக்கு அரசு சேவை, திட்டங்கள், வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதற்கான கவனம் பெறும். இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். லடாக்கில் ஏற்கெனவே லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ள நிலையில், தற்போது அங்கு மாவட்டங்களின் எண்னிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.