காசாவில் 6 பணயக் கைதிகள் சடலமாக மீட்பு... போர் தொடரும்... இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி!
அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பணயக் கைதிகளின் சடலங்களை, காசாவின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.

சென்னை: இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் முடிவே இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தினர். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் போர் அறிவித்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 105 பேரை மீட்டது. அதேபோல், அடிரடி மீட்பு நடவடிக்கைகள் மூலமும் பணயக் கைதிகள் சிலர் மீட்கப்பட்டனர். ஆனால், எஞ்சியிருக்கும் 108 பணயக் கைதிகளில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் கூறி வந்தது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில் ஆறு பேரை, காசாவின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் சடலமாக மீட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர்நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் அமைப்பினர் முறியடித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். பணயக் கைதிகளை கொன்றதற்கு ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் கட்டாயம் பொறுப்பேற்க வைக்கும் எனவும், அவர்கள் அழிக்கப்படும் வரை இந்த போர் தொடரும் என்றும் கூறியுள்ளார். மேலும், பாதுகாப்புப்படையினர் சுரங்கப் பகுதியில் சோதனை நடத்துவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே, பணயக் கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேற்கு கரையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 3 இஸ்ரேல் போலீஸார் உயிரிழந்தனர். இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையின் இடானா - தர்கியுமியா சந்திப்பு அருகே, இஸ்ரேல் போலீசார் 3 பேர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காரில் பயணித்த போலீஸார் மூவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், குழந்தைகள் பலரும் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து பாலஸ்தீனத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்த வேண்டும் என ஐநா-வின் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட 90 சதவீத குழந்தைகளுக்கு உடனடியாக போலியோ மருந்துகள் வழங்க வேண்டும் எனவும், அப்படி இல்லையென்றால் இன்னும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஐநா அமைப்பு எச்சரித்துள்ளது.
What's Your Reaction?






