காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மீண்டாட்சி மருத்துவக் கல்லூரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பாளயங்கோட்டையைச் சேர்ந்த ஷார்லி என்ற மாணவியும் அங்கு 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாணவி ஷார்லியின் தயாரும் அவருடன் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு (செப்.01) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து குதித்து ஷார்லி தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையோடு 5வது மாடிக்குச் சென்ற ஷார்லி, அங்கேயே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அப்போது ஷார்லியை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் மருத்துவர்களும் அவரை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால், அதனை கண்டுகொள்ளாத ஷார்லி, திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ஷார்லி, மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி காரணமாக மாணவி ஷார்லி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. ஆனாலும் இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டும் இல்லாமல் மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவி ஷார்லி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கல்லூரியின் 5வது மாடியில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, மாணவி ஷார்லியின் தற்கொலை சம்பவம் குறித்து, தவறான தகவல்களை பதிவிட வேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும் உயிரிழந்த மாணவி, வேலூர் சி.ம்.சி மருத்துவமனையில் மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஷார்லியின் உடலை மூன்று மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். அதன்பின்னர் ஷார்லின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஷார்லியின் உடலை பார்த்து சக மாணவ, மாணவிகள் கதறி அழுதபடி நின்றனர். இதனையடுத்து ஷார்லியின் உடல் அவரது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
5- வது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவி#Kumudamnews | #kumudam | #kumudamnews24x7 | #medicalstudent | #kanchipuram | #BreakingNews | #Shocking | #viralvideo | #viral | pic.twitter.com/ie25b1SUuh
— KumudamNews (@kumudamNews24x7) September 1, 2024
தற்கொலை தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்:104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)