IRCTC Booking: ரயில் டிக்கெட் புக்கிங்... இன்று முதல் புதிய விதிகள்... இனிமேல் 60 நாட்கள் தான்..?
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்திருந்தது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
சென்னை: இந்தியா முழுவதும் பயணிகளின் மிகப்பெரிய வழித்தடமாக இருப்பது ரயில்வே மட்டும் தான். கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களும் ரயில் பயணத்தை பெரிதும் நம்பியுள்ளனர். பேருந்துகள், விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால், அடிதட்டு மக்கள் அதிகளவில் ரயில்களில் பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை, 120 நாட்களுக்கு முன்பு ரிசர்வேஷன் செய்துகொள்ளும் நடைமுறையை இந்திய ரயில்வே பின்பற்றி வந்தது.
அதன்படி, ரயில்களில் பயணம் செல்ல விரும்பும் பயணிகள், 4 மாதங்கள் அதாவது 120 நாட்களுக்கு முன்பாக தங்களது டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்துகொள்ளலாம். ரயில் நிலையங்கள் அல்லது ஆன்லைன் மூலமாக ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள முடியும். இந்நிலையில் தற்போது அதனை 2 மாதங்களாக குறைத்து இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன்மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளும் நாட்களை 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்தது. இந்த டிக்கெட் முன்பதிவு கால மாற்றம் நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்திருந்தது.
ரயில்வே நிர்வாகம் அறிவித்தபடி, இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் இனி 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதேபோல், வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு, 365 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?