ஆம்ஸ்ட்ராங்கை முதல் ஆளாக வெட்டிய திருவேங்கடம்... 3 நாட்களில் 2 என்கவுன்ட்டரால் பரபரப்பு...
மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
போலீஸ் காவலில் இருந்தபோது என்கவுன்ட்டர் செய்யப்படும் முதல் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்த நிலையில், கடந்த பதினோராம் தேதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலைக்கு பின்னணியில் யார் உள்ளனர், ஆயுதங்கள் கொண்டு வந்தது எப்படி ஸ்கெட்ச் போட்டது எப்படி என பல கோணங்களில் பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம் ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பெயரில், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் அவரை மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக போலீசார் திருவேங்கடத்தை தீவிரமாக தேடிய போது புகழ் பகுதியில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தகர கொட்டாயில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது எடுத்து காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார். இதனால், தற்காப்புக்காக ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கியால் திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் இரண்டு முறை சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த திருவேங்கடத்தை உடனடியாக போலீசார் மாதவரத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்த போது, வரும் வழியிலேயே திருவேங்கடம் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடலானது மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு, பின்பு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் மீது 2015இல் நடைபெற்ற தென்னரசு கொலை என மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியமாக ரூட் எடுத்து கொடுத்தவரும், ஆயுதங்கள் சப்ளை செய்தவரும் திருவேங்கடம் தான் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி ஆம்ஸ்ட்ராங் வீட்டு அருகே நிற்கும்போது முதல் ஆளாக வந்து ஆம்ஸ்ட்ராங்கின் பின்புறமாக வெட்டி நிலைக்குலைய செய்ததும் திருவேங்கடம் தான் என்பது போலீசார் தெரிவித்துள்ளனர். தென்னரசு, ஆர்ம்ஸ்ட்ராங் என முக்கிய புள்ளிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதில் ஜித்தனான திருவேங்கடத்தை போலீசார் இன்று அதிகாலை என்கவுன்ட்டர் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக புதுக்கோட்டையில் துரைசாமி என்ற ரவுடியை போலீசார் என்கவுன்ட்டர் செய்த நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்ட்டர் செய்திருப்பதால் கடந்த மூன்று நாட்களில் இரண்டு என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மேலும் போலீஸ் காவலில் இருக்கும் போது நடைபெறும் முதல் என்கவுன்ட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்த நிலையில், தற்போது ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
What's Your Reaction?