தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு 2022- 23, 2023-24, 2024-25ம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து, நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணய குழு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணமாக 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்துள்ள கட்டண நிர்ணயக் குழு, தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் நிர்ணயத்துள்ளது பாரபட்சமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வசதிகள் தான், தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளிலும் உள்ளது. ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்பட தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கான செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு அவ்வளவு செலவுகள் இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை விட, தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளது குறித்து கட்டண நிர்ணயக் குழுவுக்கு மனு அளித்த போதும், அது பரிசீலிக்கப்படவில்லை. தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.