ஜிம்பாப்வே பவுலர்களை கதறவிட்ட ஜெய்ஸ்வால்... அதிரடி அரைசதம்.. டி20 தொடரை வென்றது இந்தியா!
ஒருபக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நாலாபக்கமும் பெளண்டரிகளை விளாசித் தள்ள, கேப்டன் சுப்மன் கில் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை அடித்து பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா உள்பட 6 பெளலர்கள் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
ஹராரே: இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில், இந்த இரண்டு 2 அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 8 ஓவர்களில் 63 ரன்கள் என நல்ல தொடக்கம் கொடுத்தது. சிறப்பாக விளையாடிய தடிவானாஷே மருமணி 32 ரன்கள், வெஸ்லி மாதேவேரே 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
பின்பு களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியில் வெளுக்க, மற்ற வீரர்கள் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பிரையன் பென்னட் (9 ரன்), ஜொனாதன் காம்ப்பெல் (11), டியான் மியர்ஸ் (12) என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மறுபக்கம் கடைசி வரை போராடிய சிக்கந்தர் ராசா 3 சிக்ஸர்கள், 2 பெளண்டரிகளுடன் 28 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சரமா, ஷிவம் துபே தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் நொறுக்கி தள்ளினார்கள்.
ஒருபக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நாலாபக்கமும் பெளண்டரிகளை விளாசித் தள்ள, கேப்டன் சுப்மன் கில் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை அடித்து பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா உள்பட 6 பெளலர்கள் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
முடிவில் 15.2 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 156 ரன்கள் எடுத்த இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடி அரைசதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பெளண்டரிகள், 2 சிக்சருடன் 53 பந்தில் 93 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 6 பெளண்டரிகள், 2 சிக்சருடன் 39 பந்தில் 58 ரன்களும் எடுத்து ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தனர்.
அதிரடியில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நாளை நடக்கிறது.
What's Your Reaction?