Paris Olympics 2024: 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் பைனலுக்கு சென்ற இந்தியாவின் மனு பாக்கர்.. தங்கம் வெல்வாரா?
Manu Bhaker in Paris Olympics 2024 : 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டி முன்னேறியுள்ளார். தகுதி சுற்றில் 580-27x புள்ளிகள் பெற்ற அவர் 3வது இடம் பிடித்து கெத்தாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார்.
Manu Bhaker in Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக தொடங்கியுள்ளன. ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பாரீஸில் உள்ள 35 இடங்களில் மொத்தம் 32 விளையாட்டு பிரிவுகளில் 206 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கோதாவில் களமிறங்க உள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் கொள்கின்றனர்.
இந்த நிலையில், 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டி முன்னேறியுள்ளார். தகுதி சுற்றில் 580-27x புள்ளிகள் பெற்ற அவர் 3வது இடம் பிடித்து கெத்தாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார். 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் தகுதி சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. மனு பாக்கர் இதில் வெற்றி பெற்று நாட்டுக்காக தங்க பதக்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. மனு பாக்கருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
22 வயதான மனு பாக்கர், தனது நீண்டகால பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா தலைமையில் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இதன் பலனாக தற்போது அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அதே வேளையில் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ரிதம் சங்வான் கடும் ஏமாற்றம் அளித்துள்ளார். தகுதி சுற்றில் 573 புள்ளிகள் பெற்று 15வது இடம் பிடித்த ரிதம் சங்வான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். இதேபோல் ரோவிங் படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4வது இடமே பிடித்துள்ளார். இதனால் அவர் தகுதிச்சுற்று செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஆனாலும் பால்ராஜ் பன்வாருக்கு தகுதிச்சுற்று செல்வதற்காக நாளை ஒரு போட்டி காத்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி சீனா 2 தங்க பதக்கத்தை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொரியா, அமெரிக்கா நாடுகள் வெள்ளி பதக்கமும், இங்கிலாந்து, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் வெண்கல பதக்கமும் வென்றுள்ளன.
What's Your Reaction?