“இளம் பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது” - வாஷிங்டன் சுந்தர்
கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட தனது மகளுடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்களது பெயர்களுடன் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அத்துடன் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே வேளையில் சம்பவம் நடந்த மருத்துவமனை, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அதில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 7 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக பல இடங்களில் மருத்துவத்துறை முடங்கி வருகிறது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (ஆகஸ்ட் 17) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 6 மணி வரை நடைபெறும் என மருத்துவர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள வாஷிங்டன் சுந்தர், “கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது. ஒரு சகோதரனாக, மகனாக, நண்பனாக, ஆணாக, எந்தப் பெண்ணுக்கும் இப்படி நடப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் பாதுகாப்பிற்கு ஆண்களாகிய நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் நமது முன்னிலையில் வசதியாகவும், பாதுகாப்பாகவும், பாதுகாப்பாகவும் உணரவைப்பதற்கு, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






