ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, உதவி ஆய்வாளர் படுகொலை.. இரண்டையும் நடத்தியது ஒரே கும்பலா?
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதானவர்களும், பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ரமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா, தமிழகம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் முஷம்மில் ஷெரீப்பை, முஸாவிர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் முஸாஃபிர் ஹூசைன் ஷாகிப் தான் ராமேஸ்வர கபேக்குள் சென்று வெடிகுண்டை வைத்து சென்றது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இவருக்கு போன் மூலம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவுகளை அப்துல் மதீன் தாஹா தான் வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்துல் மதீன் தாஹா குறித்த முழுவிவரங்களையும் என்ஐஏ அதிகாரிகள் சேகரித்தனர். அவர் சென்னை முதல் மும்பை வரை சென்று வந்ததும் தெரிய வந்தது.
அதேபோல். கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு - கேரளா எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான தவ்ஃபிக் மற்றும் அப்துல் சமீம், வில்சனை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி பெங்களூர் சென்று தலைமறைவாக இருந்தனர்.
இந்த குற்றவாளிகள் இருவரும் பெங்களூரில், ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பை நிகழ்த்திய அப்துல் மதீன் தாஹா மற்றும் முஸாஃபிர் ஹுசைன் ஆகியோர் ஆதரவில் தான் பெங்களூரில் தலைமறைவாக இருந்தது என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சிறையில் உள்ள பயங்கரவாதி முகமது பாஷா தொடங்கிய (AI-Hindu Trust) அல் ஹிந்து டிரஸ்ட் என்ற பயங்கரவாத அமைப்பின் கீழ் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடியதும் சதி திட்டங்களுக்காக தமிழ்நாடு - கர்நாடக வனப்பகுதிகளில் ஆலோசனையில் ஈடுபட்டதும், டார்க் வெப் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசி வந்ததும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கு உட்பட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதி காஜா மைதீனும் இவர்களுடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியதாகவும், என்ஐஏ விசாரணையில் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் பெங்களூர் ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு வழக்கின் குற்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
What's Your Reaction?






