GOAT Trailer: 'கோட்' டிரெய்லர்.. ஆக்சனில் தெறிக்க விடும் விஜய்.. பாராட்டிய அஜித்!
''கோட் பட டிரெய்லர் பார்த்து நடிகர் அஜித்குமார் பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னார்'' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான 'தளபதி' விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, வெளியாகும் படம் என்பதால் 'கோட்'டுக்கு பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து 'விசில் போடு..', 'சின்ன சின்ன கண்கள்..' என இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. மூன்றாவதாக 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..என் முன்னால நடந்தா கேட் வால்க்-கு'' என்ற பாடலும் வெளியானது. இதனைத் தொடர்ந்து கோட் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்று மாலை டிரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று மாலை 'கோட்' டிரெய்லர் வெளியிடப்பட்டது. காந்தி எனும் கதாபாத்திரத்தில் வரும் விஜய், பெயருக்கு எதிர்மாறாக மது அருந்தும் காட்சிகள் டிரெய்லரில் இடம்பெறுள்ளன. விஜய்யின் டீ ஏஜிங் காட்சிகள் வித்தியாசமாக தெரிகின்றன. 90 காலக்கட்டங்களில் கதாநாயகனாக ஜொலித்த மோகன், 'கோட்' டில் பயங்கரவாதியாக வந்து மிரட்டுகிறார்.
மறுபக்கம் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜய்க்கு உதவும் காதாபாத்திரமாக நடித்துள்ளனர். விஜய் வழக்கம்போல் ஆக்சனில் தெறிக்க விடுவார் என்பது டிரெய்லரை பார்க்கும் தெரிகிறது. டிரெய்லரில் விஜய் பேசும் ''இனிமே குடிக்கவே கூடாதுடா'' என்ற வசனமும், ''மருதமலை மாமணியே முருகையா'' என்று விஜய் படும் பாடலும் அஜித்தின் மங்காத்தா திரைப்பட காட்சிகளையும், விஜய்யின் கில்லி படத்தின் காட்சிகளையும் நினைவுப்படுத்துகின்றன. பாடல்களில் சொதப்பிய யுவன் ஷங்கர் ராஜா, டிரெய்லரின் பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார்.
டிரெய்லரை பார்க்கும்போது ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக 'கோட்' உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. முன்னதாக, 'கோட்' டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் வெளியிட்டனர். அப்போது பேசிய வெங்கட் பிரபு கூறுகையில், ''கோட் விஜய் சாரை கமர்சியல் டிரீட்டுடன் பார்க்கலாம். கோட் பக்கா கமர்சியல் படம். இதில் முகம் சுளிக்கும் காட்சிகள் ஏதும் இருக்காது.
இதேபோல் கோட் படத்தில் அரசியல் ஏதும் பேசவில்லை. படத்தில் அரசியல் கருத்தை வைக்கும்படி விஜய் எங்களுக்கு பிரஷர் கொடுக்கவில்லை. இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபு தேவா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் படி விஜயகாந்த்தும் நடித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த படத்துக்காக உலகப்புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த 'வி எப் எக்ஸ்' டீமுடன் பணியாற்றி இருக்கிறோம். கோட் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், பாடல்கள் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் படம் பார்த்துவிட்டு வரும்போது பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் கோட் பட டிரெய்லர் பார்த்து நடிகர் அஜித்குமார் பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னார்'' என்று வெங்கட் பிரபு தெரிவித்தார்.
What's Your Reaction?