சினிமா

யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் புகார்.. என்ன விஷயம்?

''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் புகார்.. என்ன விஷயம்?
Yuvan Shankar Raja

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வருபவர் யுவன் சங்கர் ராஜா. 'இசைஞானி' இளையராஜாவின் மகனான இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் உள்பட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசைக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'கோட்' திரைப்படத்திலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'கோட்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதாவது ஹஜ்மத் பேகம் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ''இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 'u1 records' ஸ்டுடியோவை எனக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளார். 

ஆனால் அவர் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார். இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் அவர் வாடகை பணத்தை செலுத்தவில்லை.

நான் துபாயில் இருக்கிறேன். வாடகை பணம் செலுத்தாதது குறித்து துபாயில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு எனது கணவர் போன் செய்தபோது அவர் பதில் அளிக்கவில்லை. மேலும் எங்களிடம் தெரிவிக்காமல் ஸ்டுடியோவை காலி செய்யும் யுவன் சங்கர் ராஜா, பீல்டிங்கின் கட்டமைப்பையும் சேதப்படுத்தியுள்ளார். ஆகவே யுவன் சங்கர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.