பணமிருந்தால் விலைக்கு வாங்கலாம்! - ராகுல்காந்தி கருத்தால் நாடாளுமன்றத்தில் அமளி
Rahul Gandhi Speech at Parliament : பணமிருந்தால் இந்தியத் தேர்வு வாரியத்தையே விலைக்கு வாங்கலாம் என்ற நிலைதான் நாட்டில் உள்ளது என மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Rahul Gandhi Speech at Parliament : இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.
இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த விவகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் மாணவர்களின் பெயர்களையும், எண்களையும் மறைத்து மையங்கள் வாரியான நீட் முடிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு பிறப்பித்தது. தவிர, நகரங்கள் வாரியாக, தேர்வு மையங்கள் வாரியாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நீட் விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. அப்போது பேசிய விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.தமிழ்நாட்டில் அனிதா உள்ளிட்ட பலரை காவுவாங்கிய நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி கலாநிதி வீராசாமியும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது பேசிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது எனவும் பொறுப்பேற்க வேண்டுமெனில் ஒட்டுமொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும் எனவும் கூறினார். வினாத்தாள் கசிவில் மத்திய அரசு சாதனை படைத்து வருவதாகக் கூறிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ், தர்மேந்திர பிரதான் கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் வரை மாணவர்களுக்கு நீதி கிடைக்காது எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நீட் மட்டுமின்றி அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும் சிக்கல் உள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான், தன்னை தவிர அனைவரையும் குற்றம்சாட்டுவதாகவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தர்மேந்திர பிரதான், நீட் தேர்வைக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, நீங்கள் பணக்காரர்களாக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால், தேசியத் தேர்வு வாரியத்தை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை நீடிப்பதாகக் கூறி கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியதில், எதிர்கட்சி - ஆளுங்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டன.
What's Your Reaction?






