Health Tips : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? - மருத்துவர் விளக்கம்
Can We Drink Water While Eating Food Health Tips in Tamil : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அது சரியா என்பது பற்றி மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.
Can We Drink Water While Eating Food Health Tips in Tamil : சாப்பிடும்போதே தண்ணீர் அருந்தும் பழக்கம் பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்கிறது. சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் அருந்தக் கூடாது என்கிற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. சாப்பிடுகையில் இயல்பாக தவிக்கும்போது தண்ணீர் குடிப்பதில் தவறில்லையே என்பதுதான் பொதுவாக நம் எல்லோருடைய கேள்வியும். சாப்பிடப்போகும் அரை மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் தண்ணீர் அருந்தக் கூடாது என்கிற கருத்து ஏற்புடையதா என்பது குறித்து இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் கேட்டதற்கு...
“சாப்பிடுவதற்கென்று இலக்கணம் இருக்கிறது. என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல் எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியமானது. இரைப்பையில் திடம், திரவம், வாயு ஆகிய மூன்றுக்கும் தனித்தனி அடுக்குகள் உள்ளன. இரைப்பைப் பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் இரைப்பையின் மேற்பகுதியில் நீர் தளும்பி நிற்கும். அதில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை போன்றவை மிதக்கும்போது வயிறு நிரைந்து விட்டது போன்ற உணர்வில் இரைப்பையையும் உணவுக்குழாயையும் இணைக்கும் வால்வு திறந்து விடும். இதனால் நெஞ்செரிச்சல், ஏப்பம், எதுக்களித்தல் ஏற்படும். இதனால்தான் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது.
‘அள்ளித் திணிச்சா அற்பாயிசு நொறுங்கத் தின்னா நூறாயிசு’ என்றொரு பழமொழி உண்டு. நொறுங்கத் தின்றால் என்றால் அதிக அளவு தின்பதல்ல. என்ன சாப்பிட்டாலும் நொறுக்கி அரைத்துத் தின்ன வேண்டும். உணவை அவசர அவசரமாக அள்ளி விழுங்கக் கூடாது. நன்கு அரைத்து விழுங்கினால்தான் செரிமானம் ஆகும். உணவை நன்கு அனுபவித்துச் சாப்பிட வேண்டும். கவனத்தை எங்கேயோ வைத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது. அப்படி முறையாக சாப்பிடும்போது தாராளமாக தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதுவும் குறிப்பிட்ட அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்பும் அளவுக்குத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த உடனே படுக்கவோ, குனியவோ கூடாது. ஏனென்றால் எதுக்களிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அளவோடு சாப்பிட்டு அளவோடு தண்ணீர் குடித்தல் நலம். மருத்துவத்தை பொறுத்தவரை எந்த விதியும் பொது விதியல்ல. அவரவர் உடலுக்கு எது பொருந்துகிறதோ அதைப் பின்பற்றுதல் நலம்.” என்கிறார் பாசுமணி.
What's Your Reaction?