கருட ஜெயந்தி நாளில் கருட தரிசனம்..பெரிய திருவடியை வணங்கினால் தீமைகள் விலகும் ஆரோக்கியம் கூடும்!

கருடாழ்வார் சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மை பெற்றிருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலாராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலட்மியின் அம்சமாகவும் விளங்குகிறார். சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது.

Aug 10, 2024 - 12:09
 0
கருட ஜெயந்தி நாளில் கருட தரிசனம்..பெரிய திருவடியை வணங்கினால் தீமைகள் விலகும் ஆரோக்கியம் கூடும்!
garuda jayanthi

சைவ ஆலயங்களில் முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடுவதைப் போல வைணவ ஆலயங்களில்  நுழைந்ததும் வழிபட வேண்டியவர் கருடாழ்வார். கொடியில் கருடக்கொடியாக காட்சித்தருகிறார். கருடன் பட்சி ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.பெரிய திருவடி என்றும் அழைக்கப்படும் கருடனுக்கு எப்படி இவ்வளவு பெரிய புகழ் வந்தது என்று புராண கதைகள் கூறுகின்றன. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆடி சுவாதி நாளில் கருட ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கருடனின் வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன் என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது.

கருடன் புராண கதை: 

தட்சனின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. காஷ்யப முனிவருக்கு காத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள். காத்ருவும்,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர்.

குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள். யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை. மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர். 

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின. வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

பெருமாளின் வாகனமான கருடன்: 

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன. பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன் தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார். வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து கருடனை தன்னுடைய வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். 

பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவை தன் மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை. கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று வரம் கேட்டார்.

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன. அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது. கருடனும் பாம்புகளும் பங்காளியாக இருந்து பகையாளியாக மாறியது இப்படித்தான். 

கருட சேவை தரிசனம் செய்தால் என்ன நன்மை: 

பெருமாள் கோவில்களில் நடைபெறும் கருட சேவை தரிசனம் சிறப்பு வாய்ந்தது. கருடன் மீது ஏறி உலா வரும் பெருமாளை தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும்.கருட வாகனத்தை பக்தர்கள் கண்டால், நோய் நொடி இல்லாமலும், விஷ ஜந்துக்கள், தீய சக்திகள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow