திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜன.18) சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டை திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதேபோன்று திமுகவின் முக்கிய தலைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆர்.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, துணை பொதுச் செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், கனிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், திமுக சட்டத்துறையைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.
திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாட்டில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
1.மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு திமுக சட்டத்துறை மாநில மாநாட்டில் இரங்கல் தீர்மானம்.
2.ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் சட்டம் நிறைவேற்றினால் அதனை எதிர்த்து வழக்கு தொடரப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. சட்டமன்றத்தை ஆளுநர் அவமதித்து வருகிறார். ஆளுநர் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட முன் வடிவுக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார் என்றும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
5. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தன்னிச்சையாக இந்த சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் குழு அமைத்தற்கு நன்றி என்று தெரிவித்தனர்.
What's Your Reaction?