திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. வழக்கறிஞர்கள் அணி காவல் அணி.. ஸ்டாலின் பெருமிதம்
திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜன.18) சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டை திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதேபோன்று திமுகவின் முக்கிய தலைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆர்.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, துணை பொதுச் செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், கனிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், திமுக சட்டத்துறையைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட தேவையான உரையாடல்களை வழக்கறிஞர்கள் தொடங்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரே பன்பாட்டிற்குள் நாட்டினை நகர்ந்துவதற்கு முயற்சி நடக்கிறது. மாநிலத்தை அழிக்க பார்க்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை பாஜக-வுக்கு நல்லது இல்லை. பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக மாற்ற தான் பயன்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இறுதிவரை எதிர்த்து ஆக வேண்டும். நான் விமர்சிப்பதால் ஆளுநரை மாற்றிட வேண்டாம். அவர் பேச பேசதான் பாஜகவின் உண்மை முகம் தோலுரிக்கிறது. இன்றைய எதிரிகள் கருத்தியல் ரீதியாக மோத தயராக இல்லை. அவ்வாறு மோதினால் தோற்றுப்போவார்கள் என்பதால் பொய்யை பரப்பி வருகின்றனர். திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி.
எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை எல்லாம் காப்பாற்றியது வழக்கறிஞர்கள் தான். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ஏராளமான வழக்குகளை போட்டார்கள், அத்தனையும் எதிர்கொண்டது வழக்கறிஞர் அணி தான். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்ட ஏற்பட்ட பிரச்சனையை தகர்த்தது வழக்கறிஞர் அணி தான். கலைஞர் கருணாநிதி இறந்தபோது அண்ணா நினைவிடம் அருகே அவரை நல்லடக்கம் செய்ய இடம் வாங்கி கொடுத்ததும் வழக்கறிஞர் அணி தான் என்று கூறினார்.
What's Your Reaction?