சைஃப் அலிகான் மீது தாக்குதல்.. வாக்குமூலம் அளித்த கரீனா கபூர்?

நடிகர் சைஃப் அலிகானை தாக்கியவர் தங்கள் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடிச் செல்லவில்லை என்று நடிகை கரீனா கபூர் வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

Jan 18, 2025 - 21:31
 0
சைஃப் அலிகான் மீது தாக்குதல்.. வாக்குமூலம் அளித்த கரீனா கபூர்?
சைஃப் அலிகான்-கரீனா கபூர்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சைஃப் அலிகான், நடிகை கரீனா கபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நடிகர் சைஃப் அலிகான், மனைவி கரீனா கபூருடன் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் (ஜன 16) நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் சைஃப் அலிகானை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை சைஃப் அலிகான் தடுத்த நிலையில் கொள்ளையர்கள் அவரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதையடுத்து, அதிகாலை 3.30 மணியளவில் நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், சைஃப் அலிகானுக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன என்றும் ஒரு காயம் அவரது முதுகுத் தண்டுவடத்தின் அருகே உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தற்போது சைஃப் அலிகான் உடல் சீராக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடிய நிலையில் நேற்று (ஜன 17) அந்நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகையும், சைஃப் அலிகான் மனைவியுமான கரீனா கபூர் போலீஸாரிடம் கூறியதாவது, "தாக்குதல் நடத்தியவர் சைஃப் அலிகானை மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டே இருந்தார். அவரை காப்பாற்றுவதில் தான் எங்கள் கவனம் இருந்தது. தாக்குதல் நடத்தியவர் எங்கள் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடிச் செல்லவில்லை" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow