Vettaiyan Box Office: இரண்டே நாளில் 100 கோடி வசூலா..? ரஜினியின் வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்.10ம் தேதி வெளியானது. இப்படத்தின் இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ஜெய்பீம் வெற்றியைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கிய அடுத்தப் படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், இரு தினங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ரிலீஸானது. ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்த ரஜினிக்கு, லால் சலாம் எதிர்பார்த்தளவில் சக்சஸ் ஆகவில்லை. இதனால் வேட்டையன் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரிலீஸான வேட்டையன் படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகும் போது, தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாட்டங்கள் இருக்கும். அதேபோல், தியேட்டர் உள்ளேயும் சீன் பை சீன் ரசிகர்கள் உட்பட அனைவரும் விசிலடித்து கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், வேட்டையன் படத்தில் ஓன்றிரண்டு சீன்கள் தவிர மற்ற இடங்களில் ரஜினி ரசிகர்களே அமைதியாக இருந்தனர். அந்தளவுக்கு வேட்டையன் படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங், பஞ்ச் டயலாக் ஆகியவைகளில் கூஸ்பம்ஸ் மொமண்ட்கள் இல்லை என சொல்லப்படுகிறது.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான சூப்பர் ஸ்டார், சமூக விரோதிகளை சகட்டு மேனிக்கு போட்டுத் தள்ளுகிறார். எந்த குற்றங்களாக இருந்தாலும், ரஜினியின் மொழி ஆக்ஷனாக மட்டுமே உள்ளது. ஆனால், அது தவறு என அமிதாப்பச்சன் புரிய வைக்க, இறுதியாக என்கவுன்டர் மனநிலையில் இருந்து திருந்துகிறார் சூப்பர் ஸ்டார். இந்த ஒன்லைன் நன்றாக இருந்தாலும், ரஜினிக்கான மாஸ் மூவியாக இது உருவாகவில்லை என, வேட்டையன் குறித்து ரசிகர்கள் கூறியிருந்தனர். அதேநேரம், ரஜினியை நடிப்பில் இப்படியொரு சமூக அக்கறையுடன் கூடிய படம் இயக்கிய ஞானவேலுக்கு, பலர் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கலவையான விமர்சனங்களால் வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், எதிர்பார்த்தளவில் இல்லை எனத் தெரிகிறது. அதன்படி, முதல் நாளில் வேட்டையன் திரைப்படம் 65 முதல் 70 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 55 முதல் 65 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது வேட்டையன். மொத்தமாக இரண்டு நாட்களில் 130 முதல் 140 கோடி வரை வசூலித்துள்ளது.
தமிழ்நாட்டில் 25 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ள வேட்டையன், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 36 முதல் 38 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 10 கோடியும், கேரளாவில் 7 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டே தினங்களில் 100 கோடி வசூலை கடந்துள்ள வேட்டையன், வரும் நாட்களில் மேலும் கலெக்ஷன் செய்யும் எனவும், இதனால் 200 முதல் 300 கோடி வரை வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?