நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிய நிலையில் அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சைஃப் அலிகான், நடிகை கரீனா கபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நடிகர் சைஃப் அலிகான், மனைவி கரீனா கபூருடன் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சைஃப் அலிகான் தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் சைஃப் அலிகானை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை சைஃப் அலிகான் தடுத்த நிலையில் கொள்ளையர்கள் அவரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, அதிகாலை 3.30 மணியளவில் நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்
சைஃப் அலிகானுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, “நடிகர் சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டுவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம்.
அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றிய தகவல்களை தெரிவிக்க முடியும்” என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் தாக்கப்பட்டாரா? அல்லது அவர் மீது கொலை முயற்சி நடந்ததா என்ற கோணத்தில் போலீஸாரும், குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?