“பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி..” தவறான கருத்துகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!
Finance Minister Nirmala Sitharaman : தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இதுபற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Finance Minister Nirmala Sitharaman : பட்ஜெட்டுக்கு பிந்தைய நாடாளுமன்ற விவாதம் காரசாரமாக நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். முன்னதாக கடந்த வாரம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பீஹாருக்கும் ஆந்திரா மாநிலத்துக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. முக்கியமாக தமிழ்நாட்டிற்கு சுத்தமாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோல், பட்ஜெட் உரையின் போது தமிழ்நாடு என்ற பெயரை கூட நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.
இந்த விமர்சனங்கள் பற்றி ஏற்கனவே விளக்கம் கொடுத்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மக்களவையில் ஆண்டுவாரியாக அறிக்கையை படித்துக் காட்டி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று அர்த்தமல்ல, பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி ரூபாய் என விளக்கம் அளித்தார். அதேபோல், சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை கொடுக்கிறது எனவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 2001 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
மேலும் படிக்க - பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி அபாரம்
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெயர் இடம்பெறாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லையா.? நீங்கள் செய்யும் போது ஊழலாகத் தெரியவில்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் மிஷன், 2047 என்பதற்கான முதல் படி தான் எனவும், பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி ரூபாய் என்பதையும் குறிப்பிட்டார். அதேபோல், தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கு ரூ.1.46 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
நகர்புற வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், ஜம்மு காஷ்மீரை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். ஒரு மாநிலத்தின் பெயர் பட்ஜெட்டில் இல்லை என்றால், அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதேபோல், தவறான கருத்துகளை பரப்பும் செயலில் எதிர்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளன, சிலர் கூறிய தவறான கருத்துகள் தனக்கு ஆழ்ந்த வருத்தத்தை கொடுத்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் கொரோனா காலங்களில் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தான் விரைவில் மீண்டெழுந்து வந்ததாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
What's Your Reaction?






