அமைதியாக போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது- வலுக்கும் கண்டனங்கள்
பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளதாக விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

M.S.சாமிநாதன் குழுவின் அறிக்கை அமல்படுத்த வேண்டும் என பஞ்சாபில் தொடர்ந்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் நேற்றைய தினம் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்கு சென்ற பல்வேறு மாநில விவசாய சங்க தலைவர்களை பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து கைது செய்துள்ள சம்பவத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுத்தொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
”மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களும், பாரதிய ஜனதா கட்சியும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் 50 % சேர்த்து M.S.சாமிநாதன் குழுவின் அறிக்கையின்படி விலை நிர்ணயம் செய்யப்படும், கொள்முதல் செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று 12 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றாமல் இருந்து வருவதை கண்டித்தும், கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் முதல் போராட்டம் 372 நாட்களுக்குப் பின்பு வேளாண் விரோத சட்டங்களை மாண்புமிகு பிரதமர் அவர்கள் திரும்ப பெற்றதோடு நிறைவு பெற்றது.
அப்பொழுதும் மூன்று மாத காலத்திற்குள் M.S.சாமிநாதன் குழுவின் அறிக்கை அமல்படுத்தப்படும் என மீண்டும் வாக்குறுதி மத்திய அரசால் அளிக்கப்பட்டது. அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியதை கண்டித்து, கோரிக்கையை நிறைவேற்ற கோரி பஞ்சாபில் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டு 400 வது நாளாக ஹரியானா எல்லையில் சம்பு, கநூரி ஆகிய இரு இடங்களில் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக் சித்சிங் தல்லேவால் 73 நாட்கள் கடுமையான உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியதை அடுத்து மத்திய அரசு விவசாய சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, நேற்று (19.03.2025) பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் சண்டிகரில் 7 வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் மத்திய அரசின் சார்பில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.”
விவசய சங்க தலைவர்கள் கைது:
”அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 4 ஆம் தேதி மீண்டும் நடத்துவது என இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது, பேச்சுவார்த்தை முடிந்து போராட்ட களங்களுக்கு சென்ற விவசாய சங்க தலைவர்களை காவல்துறை வழியிலேயே மறித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு சென்ற பல்வேறு மாநில விவசாய சங்க தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது கைது செய்து சிறையில் அடைத்தது கடும் ஜனநாயக விரோத போக்காகும். அதோடு பஞ்சாப் காவல் துறையும், மத்திய அரசின் துணை ராணுவமும் இணைந்து எல்லைகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள், டிராக்டர்களை பறிமுதல் செய்து வருகிறார்கள், கூடாரங்கள் கலைக்கப்பட்டு வருகிறது, பஞ்சாபில் விவசாயிகள் மீது நெருக்கடி நிலையை பிரயோகித்து மின் இணைப்புகளை துண்டித்து, இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பஞ்சாப் தனி தீவாக்கப்பட்டுள்ளது.
142 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளை பஞ்சாப் மாநில அரசும், மத்திய அரசும் ஜனநாயக விரோத போக்கோடு, வன்முறையை கையாண்டு, அடக்கி ஒடுக்குவதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது, கைது செய்யப்பட்ட விவசாய சங்க தலைவர்களும், விவசாயிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான அமைதியாக போராடும் உரிமை உடனடியாக உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளை அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு பழையபடி போராட அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read more: 3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு
What's Your Reaction?






