மகாராஷ்டிரா தேர்தலில் சதி நடந்திருக்கும்... அடித்துக் கூறிய திருமாவளவன்!
மகாராஷ்டிராவில் என்ன சதி வேலைகளில் பாஜக ஈடுபட்டார்கள் என்பது ஓரிரு நாட்களில் வெளிச்சத்திற்கு வரும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"சென்ட்ரல்" திரைப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா கே.கே நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் நடைபெற்று வருகிறது. இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன் வெளியிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜார்கண்டில் காங்கிரசுக்கு எதிரான மனநிலை இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் சொல்லப்பட்டன. ஆனால் அவ்வாறு இல்லை. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மகாராஷ்டிராவில் கருத்துக் கணிப்புகளையும் மீறி பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால் அது மிகவும் கவலை அளிக்கிறது.
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியின் வாக்குகள் சிதறிப் போய் உள்ளது. காங்கிரசுக்கு வாக்களிக்க இருந்த தலித் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் இந்தியா கூட்டணி வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிராவில் பெரும்பான்மையான இடங்களில் 1000, 500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாக வாக்களிக்க இருந்த தலித்துக்களின் வாக்குகள் சிதறியதே தோல்விக்கு காரணம். மும்பையில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடமான தாராவியில் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றி நல்ல அறிகுறி அல்ல, கவலை அளிக்கக்கூடிய ஒன்று. நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பேச இயலாது. மகாராஷ்டிரா தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருக்குமோ என்ற கருத்தும் மேலோங்கி உள்ளது. பாஜக ஆட்சியை கைப்பற்ற அனைத்து சதி வேலைகளிலும் ஈடுபடும். அவ்வாறு மகாராஷ்டிராவில் என்ன சதி வேலைகளில் பாஜக ஈடுபட்டார்கள் என்பது ஓரிரு நாட்களில் வெளிச்சத்திற்கு வரும். எதிர்க்கட்சிகள் மீண்டும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக மகாராஷ்டிரா தேர்தல் முடிவு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?