ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா மாரடைப்பால் காலமானார்
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா இன்று காலமானார்.
ஹரியானா மாநிலத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் ஓம் பிரகாஷ் செளதாலா. இவர் முன்னாள் துணை பிரதமரும், ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவிலாலின் மகன்களில் ஒருவராவார். இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் செளதாலா ஏழு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
1989-ஆம் ஆண்டு முதல்முறையாக ஹரியானா மாநில முதல்வராகப் பதவியேற்ற இவர் 171 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக நீடித்தார். பின்னர் 1990-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதல்வரானார். அப்போதும் ஐந்து நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஹரியானா முதல்வராக நியமிக்கப்பட்ட ஓம் பிரகாஷ் செளதாலா 14 நாட்கள் மட்டுமே முதல்வர் பதவியில் இருந்தார்.
1999-ஆம் ஆண்டு நான்காவது முறையாக முதல்வரான இவர் சுமார் நான்கு மாதங்கள் மட்டுமே அப்பதவியில் நீடித்தார். பின்னர், ஓம் பிரகாஷ் செளதாலா 1999-ஆம் ஆண்டு சட்டசபையை கலைத்ததாக கூறப்படுகிறது. 2000-ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக முதல்வரான செளதாலா முதல் முறையாக தனது முழு ஐந்தாண்டு கால முதல்வர் பதவியையும் நிறைவு செய்தார்.
89 வயதான ஓம் பிரகாஷ் செளதாலா நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று குருகிராமில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1999-2000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஹரியானாவில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான மோசடி வழக்கில் ஈடுபட்ட ஓம் பிரகாஷ் செளதாலாவிற்கு 2013-ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2021-ஆம் ஆண்டு அவர் அந்த வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?